வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடப் பெண்களுக்கு தாட்கோ அழைப்பு

வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயன் பெற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாயத்தைச்  சேர்ந்த பெண்களுக்கு தாட்கோ அழைப்பு விடுத்துள்ளது.

ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சார்ந்தோரின் நில உடைமையை அதிகரிக்கும் வகையிலும், ஆதிதிராவிட மகளிரின் நிலையை உயர்த்தும் நோக்கிலும் தாட்கோ மூலம் மகளிருக்கான வேளாண் நிலம் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ், திட்டத் தொகையில் 30 சதவீதம் (அதிகபட்சம் ரூ.2,25,000) மானியம் வழங்கப்படும். 18 வயதுக்கு மேல் 65 வயதுக்கு உள்பட்ட பெண்கள் ஆதிதிராவிடர் அல்லாத பிற சமுதாயத்தினரிடம் இருந்து நிலத்தை வாங்கி பயன்பெறலாம்.

நன்செய் நிலமாக இருப்பின் 2.5 ஏக்கரும், புன்செய் நிலமாக இருப்பின் 5 ஏக்கர் வரையும் நிலம் வாங்கலாம்.
ஏற்கெனவே நிலம் உடையவராக இருப்பின், அந்த நிலத்தை கழித்ததுபோக நன்செய் நிலம் 2.5 ஏக்கருக்குள்ளும், புன்செய் நிலம் 5 ஏக்கருக்குள்ளும் வாங்கலாம்.

வாங்கவுள்ள வேளாண் நிலத்தினை விண்ணப்பதாரரே தேர்வு செய்து நில விற்பனையாளரிடம் எழுத்து மூலமாக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.

நில மேம்பாடு திட்டம்: நில மேம்பாடு திட்டத்தின்கீழ், ஏற்கெனவே உள்ள நிலத்தில் நீர்வள ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் நபார்டு வழிகாட்டுதல்படி, நிலத்தடி நீராதாரமுள்ள பகுதிகளில் திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு, பம்புசெட் அமைத்தல், சொட்டு நீர்பாசனம் மற்றம் சுழல்முறை நீர்பாசனம் அமைத்தல் போன்றவற்றுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் மானியமாக (அதிகபட்சம் ரூ.2,25,000) வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்கள், பெண்கள் இருபாலரும் பயன்பெறலாம்.

வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விருப்புவோர், தங்களது சாதிச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, வாங்க உத்தேசித்துள்ள நிலத்தின் சிட்டா, அடங்கல், நில வரைபடம், சார் பதிவாளரிடம் பெற்ற நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு, கிரைய ஒப்பந்தப் பத்திரம், வில்லங்கச் சான்று ஆகியவற்றுடன் w‌w‌w.‌a‌p‌p‌l‌i​c​a‌t‌i‌o‌n.‌ta‌h‌d​c‌o.c‌o‌m என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருவண்ணாமலை, முத்துவிநாயகர் கோயில் தெரு, நெ.183 என்ற விலாசத்தில் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!