விவசாயம், வீட்டு உபயோகத்திற்கு ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், சவுடுமண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து விவசாயத்திற்கு வண்டல் மண், சவுடுமண் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வண்டல் மண், சவுடுமண்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சியின் பராமரிப்பில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் இருந்து அரசின் அரசாணையின்படி வண்டல் மண், சவுடுமண் ஆகிய கனிமங்களை கட்டணம் ஏதுமின்றி விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்காக 30 கன மீட்டர் (அதாவது 200 கன அடி கொள்ளளவுடைய 5 லாரிகள்) எடுத்துக் கொள்ளலாம்.

வண்டல் மண், சவுடுமண் எடுப்பவர்களின் குடியிருப்பு அல்லது விவசாய நிலம் ஆகியவை அந்த வருவாய் கிராமம் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் மற்றும் கிராம கணக்குகளை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்று உதவி கலெக்டர், வருவாய் கோட்ட அலுவலரை அணுகி உரிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
வணிக நோக்கத்திற்காக…

மேலும் மேற்படி அரசு ஆணையின்படி பிற வணிக நோக்கத்திற்காக (30 கன மீட்டருக்கு கூடுதலாக) மண் எடுக்க விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.1,500 அரசு கருவூலத்தில் செலுத்தி உரிய படிவத்தில் சான்றிதழ்களுடன் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை கண்டறியும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் ‘சீனியரேஜ்’ கட்டணம் மற்றும் கனிம கட்டணத்தை செலுத்தி மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்று அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு வண்டல் மண், சவுடுமண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!