திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் புகார் மனு

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி செய்யாமல் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் புகார் மனு அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திறன்வளர் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்ட மேல்நிலை பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி சதவீதம் பெற வேண்டி ஆசிரியர்களுக்கான திறன்வளர் பயிற்சி கடந்த 16–ந் தேதி முதல் 23–ந் தேதி வரை திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.

அதன்படி கடந்த 16–ந் தேதி கணித பாட முதுகலை ஆசிரியர்களுக்கு திறன்வளர் பயிற்சியும், 17–ந் தேதி வேதியியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் வளர்பயிற்சியும் நடந்தது.

வெளிநடப்பு
17–ந்தேதி நடந்த திறன் வளர்பயிற்சியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் உள்ள சில ஆசிரியர் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பயிற்சியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு பயிற்சி நடக்கும் அரங்கின் அருகே பயிற்சி நடத்த விடாதவாறு கோஷங்கள் எழுப்பினார்கள்.

தொடர்ந்து சில ஆசிரியர்கள் என்னிடம் வந்து திறன்வளர் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்கள். தற்போதும் சில ஆசிரியர்கள் திறன்வளர் பயிற்சி நடத்தக்கூடாது என்று கூறி பணி செய்ய விடாமல் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

சில ஆசிரியர்கள் பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடும்பத்தை பற்றி அவதூறு
கடலூர் மாவட்டம் சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி கழக மாநில தலைவருமான மணிவாசகம் என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் ‘வாட்ஸ் அப்’ மூலம் அவதூறு பரப்பி வருகிறார்.

மேலும் பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என ஆசிரியர்களுக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும், ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கூடாது என மாணவர் நலனுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி கழக மாநில தலைவர் மணிவாசகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!