திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கடந்த 6 நாட்களாக தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன்,

சண்டிகேஸ்வரர் ஆகியோரும் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 8ம் தேதி இரவு வெள்ளித்தேரோட்டம் நடந்தது. வெள்ளி ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்தனர். 7ம் நாளான்று தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் இழுக்கப்படும். அதன்படி 5 தேர்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தேரோட்டத்தையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள்

தேரில் எழுந்தருளினர். கார்த்திகைதீப திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு கிராமங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்திருந்தனர். இதனால் திருவண்ணாமலையில் உள்ள மடங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. கார்த்திகை தீபத்திருவிழாவின் உச்ச கட்டமாக,10 ஆம் நாளான இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கோயில் பிரகாரத்தில் பரணி தீபம் காண்பதற்கு அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து பரணி தீபம் ஏற்றிய அகல்விளக்கை பக்தர்கள் கண்டு தரிசித்தனர். மலை மீது மகாதீபம் ஏற்றுவதற்கான தீப கொப்பரைக்கு சனிக்கிழமையன்று காலை கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பின்னர் 12 பேர் கொண்ட குழுவினர் மலை உச்சிக்கு தீப கொப்பரையை தோளில் சுமந்தபடி கொண்டுசென்றனர். இந்த ஆண்டு தூய செப்பினால் சுமார் 200 கிலோ எடை, 5 அடி உயரம் கொண்ட தீப கொப்பரை உருவாக்கப்பட்டுள்ளது. மலை மீது மகாதீபம் ஏற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கொடி மரத்தின் முன்பு எழுந்து காட்சியளித்தார்.

கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருநாளன்று மட்டுமே அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுடன் இணைந்து,

அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவது வழக்கம். அர்த்தநாரீஸ்வரரை, கோயில் முன்பு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இதனையடுத்து 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை எட்டியது. மலை மீது தீபம் ஏற்றப்பட்ட உடன் ஏராளமானோர் தங்களின் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.

திருப்பரங்குன்றத்தில் தீப திருவிழா முருகப் பெருமானின் அறுபடை திருத்தலங்களில், மகா தீபம் ஏற்றியும், சொக்கர் பனை கொளுத்தியும் கார்த்திகை தீபத் திருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கோயிலின் முன்புறம் அமைந்துள்ள தீப மேடையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 300 கிலோ நெய் நிரப்பப்பட்ட கொப்பரையில், பிரம்மாண்ட திரி அமைக்கப்பட்டு, ஏற்றப்பட்ட தீபத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!