போளூரில் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தலைவர், மேற்பார்வையாளர் கைது

போளூரில் விவசாய கடன் தள்ளுபடி சான்று, அடமான நில பத்திரம் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தலைவர், மேற்பார்வையாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் கடன்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா அர்ஜுனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). விவசாயி. இவர் போளூரில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நிலவள வங்கி) பவர் டில்லர் வாங்க ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.

இந்த கடனுக்கு ஈடாக தனக்கு சொந்தமான நிலப்பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்திருந்தார். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு கூட்டுறவு வங்கியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்

அதன்படி விவசாயி மாணிக்கத்திற்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 593 தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் தான் வாங்கிய கடனுக்காக ரூ.24 ஆயிரத்து 407–ஐ ஏற்கனவே வங்கியில் செலுத்தி இருந்தார். தொடர்ந்து கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பட்டியல் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

அந்த பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாணிக்கம் கடன் தள்ளுபடி சான்றிதழ், அடமானம் வைத்திருந்த நில பத்திரத்தை வாங்க கூட்டுறவு வங்கிக்கு சென்றார். அப்போது கூட்டுறவு சங்க தலைவர் ஏழுமலை (50), மேற்பார்வையாளர் முனிவேல் (53) ஆகியோர் கடன் தள்ளுபடி சான்று மற்றும் அடமான நில பத்திரம் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும், இதில் ரூ.4 ஆயிரத்தை ஏழுமலையிடமும், ரூ.1,000–த்தை முனிவேலுவிடம் கொடுத்தால் தான் கடன் அவற்றை உடனடியாக வழங்க முடியும் என கூறியுள்ளனர்.
ரசாயனம் தடவிய பணம்

இதையடுத்து மாணிக்கம் மற்றொரு நாளில் பணம் கொடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்துள்ளார். கடன் தள்ளுபடி சான்று, நில பத்திரம் பெற லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கம் அது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், மஞ்சுளா, அசோக் ஆகியோர் மாணிக்கத்திடம் ரசாயனம் கலந்த ரூ.5 ஆயிரத்தை கொடுத்து லஞ்சமாக கூட்டுறவு சங்க தலைவர் ஏழுமலை மற்றும் மேற்பார்வையாளர் முனிவேல் ஆகியோரிடம் கொடுக்கும்படி கூறினார்கள்.

அதன்படி நேற்று மதியம் 1 மணியளவில் மாணிக்கம் ரசாயனம் தடவிய பணம் ரூ.4 ஆயிரத்தை ஏழுமலையிடமும், ரூ. ஆயிரத்தை முனிவேலுவிடம் வங்கிக்கு சென்று கொடுத்தார். அப்போது வங்கியின் வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் பிடித்தனர். ஏழுமலையிடம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் தீவிர விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
ஜெயிலில் அடைப்பு

விசாரணை முடிந்ததும் ஏழுமலை, முனிவேல் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஏழுமலை போளூர் அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!