திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் விரிசல்கள் சீரமைப்பு பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் விரிசல்கள் சீரமைப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளன. ராஜகோபுரம் 100 சதவீதம் பாதுகாப்புடன் உள்ளது என்று விரிசல்கள் சீரமைப்பு நிறைவு பணிகளை ஆய்வு செய்த ஐ.ஐ.டி. உதவி பேராசிரியர் அருண்மேனன் கூறினார்.
ராஜகோபுர கல்தூணில் விரிசல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் புகழ்பெற்ற ஆன்மிக கோவில்களில் ஒன்றாக உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்கான திருப்பணிகள் கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன்படி 217 அடி உயரமான ராஜகோபுரத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்தது. அப்போது பிரதான கருங்கல் தூணில் விரிசல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, அருகேயுள்ள திட்டி வாசல் வழியாக கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ராஜகோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சென்னை ஐ.ஐ.டி. உதவி பேராசிரியர் அருண்மேனன் தலைமையிலான சிறப்பு குழுவினர் கடந்த ஆகஸ்டு மாதம் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தனர். அப்போது கல்தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் துருப்பிடிக்காத உலோகத்தால் இணைக்கப்படும் என்று உதவி பேராசிரியர் கூறினார்.
சீரமைப்பு பணிகள்

அதைத்தொடர்ந்து கடந்த 6–ந் தேதி லண்டன் கட்டுமானவியல் வல்லுனர் ஜோஸ் ஹார்ட் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன பொறியாளர் நித்தின் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் கல்தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் பகுதியை துருப்பிடிக்காத உலோகம் மூலம் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ராஜகோபுரத்தின் கல்தூண்களில் வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என ஜோஸ் ஹார்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் ராஜகோபுரத்தின் வலது, இடதுபுறத்தில் உள்ள கல்தூண்களில் சிறிய அளவில் 6 இடங்களில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக சிறய அளவிலான விரிசல்களை சரிசெய்யும் பணி தொடங்கியது. கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியின் இருபுறத்திலும் சிறிய அளவில் துளையிட்டு துருப்பிடிக்காத உலோகத்தினால் இணைக்கும் பணிகள் நடந்தது. இந்த நிலையில் கடந்த 11–ந் தேதி ராஜகோபுரத்தில் ஏற்பட்டிருந்த அனைத்து விரிசல்களும் சரி செய்யப்பட்டன.

ராஜகோபுரத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்கள் சீரமைப்பு நிறைவு பணிகளை சென்னை ஐ.ஐ.டி. உதவி பேராசிரியர் அருண்மேனன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீரமைப்பு செய்யப்பட்ட கல்தூண்கள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்ட இடங்களை ஏணி மூலம் ஏறி அருகே சென்று அருண்மேனன் பார்வையிட்டார்.
100 சதவீதம் பாதுகாப்பு

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராஜகோபுர கல்தூணில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் துருப்பிடிக்காத உலோகம் மூலம் இணைப்பட்டு, விரிசல்கள் சரி செய்யப்படும் என்று கூறியிருந்தேன். அதன்படி விரிசல்கள் துருப்பிடிக்காத உலோகம் மூலம் இணைக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் கோபுரத்தின் பக்கவாட்டில் ஏற்பட்ட சிறிய விரிசல்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் சீரமைப்பு பணிகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது.

ஏற்கனவே உள்ள பழைய முறையின் படியே விரிசல்கள் தற்போது சரி செய்யப்பட்டது. தற்போது ராஜகோபுரம் 100 சதவீதம் பாதுகாப்புடன் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிறிய, பெரிய கோபுரங்கள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. எனவே கோபுரங்களில் சிறிய அளவிலான விரிசல்கள் தெரியாத வண்ணம் உள்ளன. அவற்றால் எவ்வித ஆபத்தும் இல்லை. அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களும் விரைவில் ஆய்வு செய்யப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, கோவில் ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!