படித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடனுதவி பெற்று தொழில் தொடங்கலாம். விண்ணப்பதாரர் பட்டம், பட்டயம், ஐடிஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு 21-க்கு மேல் 45-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரின் வயது 35-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தகுதியுள்ள உற்பத்தி, சேவைத் தொழில்களைச் செய்யலாம். திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.5 கோடி வரை இருக்கலாம்.
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் உதவி பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு சென்னையிலுள்ள தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் மூலம் 3 வார காலம் (15 நாள்கள்) திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
எனவே, தகுதி, தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், திருவண்ணாமலை என்ற அலுவலகத்தில் வரும் 29 முதல் 31-ஆம் தேதி வரை தினமும் காலை 11 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு, விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 9486494621, 9840566320 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!