முத்திரைக் கொல்லர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள 16 முத்திரைக் கொல்லர் காலிப் பணியிடங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய முத்திரை ஆய்வர் அலுவலகங்களில் காலியாக உள்ள 16 முத்திரைக் கொல்லர் பணியிடங்கள் இனச் சுழற்சி விதிகளின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு 2017 ஜூலை 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு உள்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் 32 வயதுக்கு உள்பட்டவராகவும், ஆதிதிராவிடர் – பழங்குடியினர், ஆதரவற்ற விதவையர் 35 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர், சென்னை தொழிலாளர் இணை ஆணையர்-1, சென்னை தொழிலாளர் இணை ஆணையர்-2, வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்களை இணைத்து மே 10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். முகவரி: கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல வாரியக் கட்டடம், 6-வது தளம், டி.எம்.எஸ் வளாகம், சென்னை-600006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!