திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
தமிழக அரசு படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி பொருளாதார முன்னேற்றம் அளிக்கும் வகையில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி 2016–2017–ம் ஆண்டில் 183 பேருக்கு தொழில் தொடங்க மானியமாக ரூ.91½ லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த மானிய தொகையை பெற, குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு அதிகபட்சமாக 35 வயதும், சிறப்பு பிரிவினருக்கு 45 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதியாக குறைந்தபட்சம் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

25 சதவீதம் மானியம்
அதிகபட்சமாக உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்திற்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். உற்பத்தி இனத்திற்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

எனவே தகுதியுள்ள இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் பொது மேலாளரை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். மேலும் இதுதொடர்பான தகவல்களுக்கு நேரடியாக மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!