இயற்கை முறையில் கத்திரி சாகுபடி

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர், தனது சுய முயற்சியால் இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்து, நல்ல மகசூலை பெற்றுவருகிறார்.

காரைக்கால் பிராந்தியத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடியும், ஆழ்குழாய் பாசன வசதியுள்ள கிராமங்களில் தோட்டப் பயிர் சாகுபடியும் நடைபெற்றுவந்தன.காலப்போக்கில் காவிரி நீர் வரத்தில் பாதிப்பு, குறித்த காலத்தில் மழையின்மை போன்ற காரணங்களால் சாகுபடி பரப்பு குறைந்து தற்போது, மூவாயிரம் முதல் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மட்டுமே விவசாயம் செய்யும் நிலை உள்ளது.

இதில், தோட்டக்கலை மேம்பாடு என்பது வெகுவாக குறைந்துவிட்டது.இந்நிலையில், தோட்டக் கலையை காரைக்காலில் மேம்படுத்தும் நோக்கிலேயே, அரசலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் குறுக்கே கடைமடை நீர்த்தேக்க மதகுகள் கட்டப்பட்டுள்ளன. பல இடங்களில் அரசு சார்பில் ஆழ்குழாய் பாசன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், உழவர் சந்தை ஆகியவை அரசால் திறக்கப்பட்டன. ஆனால், தோட்ட சாகுபடி என்கிற வகைகள் காரைக்காலில் 5 சதவீத அளவிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், உழவர் சந்தைகள் பயனற்றதாக உள்ளன.

இதனால், காரைக்கால் மக்களுக்குத் தேவையான காய்கறிகள் வெளியூர்களிலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகள் தோட்டப் பயிர் சாகுபடி மேற்கொண்டுவருகின்றனர். இதனால், தற்போது இயற்கை முறையிலான தோட்டப் பயிர் சாகுபடி மேம்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, வேளாண் துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

இந்நிலையில் திருநள்ளாறு பகுதி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆர். முருகபூபதி என்கிற பட்டதாரி இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக தனது தோட்டத்தில், இயற்கை முறையில் கத்திரி, முளைக்கீரை, தக்காளி, புடலை, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டலின்படி, முற்றிலும் ரசாயனமின்றி பயிர் செய்து நல்ல மகசூலை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியது:

லாப நோக்கில் வீரிய ஒட்டுரக விதைகளையும், செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து முதலானவற்றைப் பயன்படுத்தி தற்போது காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதை உண்பவருக்கு, பக்க விளைவுகள் ஏற்படும் நிலையுள்ளது. இதனால், இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்துவருகிறேன்.
செவந்தம்பட்டி கத்தரி: பாரம்பரிய கத்திரி ரகங்களுள் ஒன்றான செவந்தம்பட்டி ரகத்தில் 30 நாளான நாற்றுகளை காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து வாங்கிவந்து தோட்டத்தில் நிகழாண்டு நடவு செய்தேன்.
இதற்காக 60 நாள்களுக்கு முன்னதாகவே நிலத்தை உழுது அதில் பசுந்தாள் உரங்களுள் ஒன்றான சணப்பு விதைகளை விதைத்து, 45 நாள்களில் மண்ணுடன் உழவு செய்தோம். இதனால், மண்ணில் பல ஆண்டுகளாக உரம் மற்றும் ரசாயன பூச்சி மருந்துகளால் ஏற்பட்டிருந்த கார அமில தன்மைகளை இது மாற்றியது. மேலும் மண்ணுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளையும் கொடுப்பதனால் அடுத்தடுத்த பருவ சாகுபடி நல்ல மகசூலை தரும்.
இதன்பிறகு மண்ணை இரண்டுமுறை நன்கு உழவு செய்து மண்ணை காயவைத்து அதன்பிறகு 5 அடி பட்டத்தின் அகலமும், 4 அடி செடிக்கு செடி அகலமும் வைத்து குழிவெட்டி, அதில் நன்கு மக்கிய தொழு உரங்களை குழிகளில் இட்டு அதன் பிறகு அதில் தேர்வு செய்த நாற்றுகளை நடவு செய்தேன்.
பின்னர் மூன்று நாள்கள் காலை மற்றும் மூன்று நாள்கள் மாலையிலும் தண்ணீர் ஊற்றி பின்னர் பருவத்தில் கொத்தி, பார்கள் அமைத்து, முதல் பூச்சி விரட்டியாக 3 எ கரைசல் எனப்படும் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் முதலியவற்றை நன்கு இடித்து அதில் பசுவின் கோமியத்தை கலந்து தெளித்தோம். மேல் உரமாக ஈயம் கரைசலை பயன்படுத்தினோம்.
இதன் பிறகு செடிகளுக்கு இலைவழி உரமாக பஞ்சகவ்யம், பூச்சி விரட்டிகளாக 3 ஏ கரைசல், 7 இலை கரைசல் முதலியவற்றை பயன்படுத்தினோம். தற்போது 90 நாள்கள் கடந்த நிலையில் ஏறக்குறைய 6 அடி உயரம் வளர்ந்து செடி நல்ல மகசூலை தந்துகொண்டிருக்கிறது. சுமார் 20 செண்ட் நிலப் பரப்பில் பயிர் செய்திருக்கும் கத்திரி கடந்த 60 நாள்களில் 1,265 கிலோ பறிக்கப்பட்டுள்ளன.
இந்த செடிகளில் மேலும் 8, 9 மாதங்கள் வரை காய்ப்பு இருக்கும். இது இயற்கை முறையிலானது என்பதால் இந்த மகசூல் தொடரும். நல்ல லாபம் கிடைப்பது தெரிகிறது. உற்பத்தி அனைத்தும் காரைக்கால் பகுதி சந்தைக்கே விற்பனைக்காக அனுப்பப்படுகிறது என்றார்.

நன்றி: தினமணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!