நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் குறைபாடுகளை தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரகம் நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,590 மற்றும் ஊக்கத்தொகை ரூ.70 சேர்த்து ரூ,1,660 வழங்கப்படுகிறது. இதுதவிர, பொது ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ,1,550 மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 சேர்த்து ரூ.1,600 என்ற விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
28 நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 1,800 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 541 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த விற்பனை நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம்.
புகார் தெரிவிக்க அழைப்பு: விற்பனை செய்த நெல்லுக்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அளிக்க வேண்டும். விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லுக்கு கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் எவ்வித தொகையும் வழங்கத் தேவையில்லை.
நெல் கொள்முதலில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை 9487262555 என்ற எண்ணிலும், மேலாளரை (தரக்கட்டுப்பாடு) 9443920526 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனுக்குடன் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!