தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது- முப்பெரும் விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் இணைந்து நடத்திய நூலகர் தின விழா, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, போட்டிகளில் வெற்றிப்பெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முனேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் (பொறுப்பு) பூ.சண்முகம் வரவேற்றார். நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவரும் தலைமையாசிரியருமான க.சண்முகம், பட்டதாரி ஆசிரியர் இராஜேஸ்வரி, ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன், எஸ்.ஆர்.எம். இன்போடெக் முதல்வர் எ.தேவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மருதாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.கே.எ.லோகேஸ்வரன், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் பல துறைகளில் முன்னிலையில் இருப்பதற்கு பல தலைவர்களும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், பல்வேறு மக்கள் நலத்திடங்களைக் கொண்டு வந்தார். அனைத்து ஏழைக் குழந்தைகளும் பசியின்றி படிக்க வேண்டுமென்கிற உயரிய எண்ணத்தில், மதிய உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தினரார். தமிழக உரிமைகளை மத்திய அரசோடு பலமுறை போராடி பெற்றுத் தந்தார்.
இன்றைக்கு நூலகர் தினமாக நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதனின் பிறந்த நாள் கொண்டாட்டப்படுகிறது. தமிழக நூலக வளர்ச்சிக்கென தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருமகனார் எஸ்.ஆர்.ரெங்கநாதன். தமிழகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஒரு இயக்கம்போல் கொண்டு சென்ற முன்னோடி அவர். இப்படியான, தமிழகத் தலைவர்களைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை குழந்தைகளுக்கு நாம் ஒன்றும் சொல்லித் தருவதில்லை. இந்தத் தலைவர்களின் தன்னலற்ற மக்கள் பணிகளை நம் குழந்தைகளிடம் நாம் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், ரூ.5,000/- செலுத்தி நூலகப் பெரும் புலவலராக இணைந்த மருதாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.கே.எ.லோகேஸ்வரன், ரூ.1,000/- செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த ஆசிரியர்கள் சி.துரை, இராஜேஸ்வரி ஆகியோருக்கு பாராட்டுச் செய்யப்பட்டது. நிறைவாக, நூலக உதைவியாளர் பு.நாராயணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *